அதிர்ஷ்டம் தைரியசாலிகளைத்தான் தேடிவரும் (Fortune follows the brave). அதாவது, துணிச்சலான முடிவு எடுப்பவர்களுக்குதான் அதிர்ஷடம் கிடைக்கும். சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா மாதிரி, பல வகையிலும் துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா.
பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருப்பவர். அரசாங்கத்துக்கு எதிராக துணிச்சலாகக் கருத்துகளை சொல்லக்கூடியவர். சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் நடந்த கலவரத்தின்போது மதரீதியாக மக்களைப் பிரிப்பது ஆபத்தானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்த கிரண், சொந்தமாக உழைத்து பெரும் பணம் சம்பாதித்தவர். சிலர் தொழிலுக்கு வந்த பிறகு, திருப்புமுனையை உருவாக்கி இருப்பார்கள். ஆனால், கிரண் மஜூம்தார் தொழிலுக்கு வந்ததே திருப்புமுனையால் தான்.
கலைந்துபோன மருத்துவக் கனவு...
இவருடைய அப்பா யுனைடெட் புரூவெரிஸ் நிறுவனத்தின் brew master. brew என்றால், மதுபானத்தை வடித்து, காய்ச்சி உருவாகுவது. கிரணின் அப்பா அதில் ஒரு நிபுணர். கிரணுக்கு மருத்துவம் படித்து, டாக்டராக வேண்டும் என்பது கனவு. ஆனால், ஸ்காலர்ஷிப்பில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. பணம் கட்டியாவது மருத்துவம் படிக்கலாம் என்று பார்த்தால், ரூ.10,000 கட்ட வேண்டியிருந்தது.
1970-களில் அது பெரிய தொகை. ஆனால், அவர் அப்பாவால் கொடுக்க முடிந்த தொகைகூட. அந்த யோசனையை அவரின் அப்பாவிடம் சொன்னபோது, அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ``பணம் கட்டிப் படிக்கலாம் என்பது தவறு. இப்போது படித்துவிட்டால் பின்னாள்களில் அதற்காக வருத்தப்படுவாய். பணத்தின் மதிப்பு இப்போது உனக்குப் புரியாது. அதனால் வேண்டாம்’’ என மறுத்துவிடுகிறார்.
கிரணும் விடுவதாக இல்லை. ``நான் பெண் என்பதால், எனக்குப் பணம் தந்து படிக்க வைக்க மறுக்கிறீர்களா’’ என்று போராடிப் பார்த்தார். ``என்னுடைய குழந்தைகள் யாராக இருந்தாலும் கிடையாது’’ என்று திட்டவட்டமான பதில் வர, கிரணின் டாக்டர் கனவு கலைந்துபோனது.
அடுத்து என்ன செய்யலாம்?
டாக்டர் கனவு கலைந்தாலும், கிரண் கலங்கி நின்றுவிடவில்லை. அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்தார். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் கிரணின் தோழிகள் திருமணக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கிரணோ மேற்கொண்டு படிக்க நினைத்தார். ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கத் திட்டமிட்டார். ஆனால், அவருடைய அப்பாவோ, brewing பற்றிப் படிக்கலாம் என ஆலோசனை சொன்னார்.
கிரணுக்கு அதிர்ச்சியைத் தந்தது அவர் சொன்ன அட்வைஸ். காரணம், அது, ஆண்கள் மட்டுமே இருக்கும் பிரிவு. அதைப் போய் ஏன் என்னைப் படிக்கச் சொல்கிறீர்கள் என்று அப்பாவிடமே கேட்டார் கிரண். ``brewing என்பது மிகப் பெரிய சயின்ஸ். இதில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்று சொல்லி ஆஸ்திரேலியாவில் உள்ள கல்லூரிக்கு அனுப்பி அதைப் படிக்க வைத்தார்.
வகுப்பில் மொத்தம் 12 மாணவர்கள். இவர் நினைத்தது போல அதில் 11 பேர் ஆண்கள். தவிர, சர்வதேச அளவில் மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள். பிலிபைன்ஸ், ஆஸ்திரேலியா, கென்யா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தார்கள்.
ஸ்காட்லாந்தில் வேலை கிடைத்தது...
அங்கு படிக்க வந்திருப்பவர்களுக்கு முன்அனுபவம் இருந்தது. ஆனால், எந்த முன்அனுபவமும் இல்லாமல் நன்றாகப் படித்தார் கிரண். அந்தப் படிப்பைப் படித்த முதல் மாணவியாக இந்தியா திரும்பினார். நன்றாகப் படித்து முடித்தாகிவிட்டது. வேலை நிச்சயம் என்னும் நம்பிக்கையில் 1975-ம் ஆண்டு இந்தியா வந்த கிரணுக்கு அதிர்ச்சி.
ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்தத் துறையில் அவருக்கு வேலை கிடைப்பது சிரமமாகவே இருந்தது. எனவே, புதிய புராஜக்ட்டை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். ஆனால், அந்த புராஜக்ட் செயல்பட தொடங்கிய பிறகு, மீண்டும் இன்னொரு இடத்தில் வேலை தேட வேண்டிய கட்டாயம் கிரணுக்கு. இனி இந்தியாவில் இருந்தால் சரிப்படாது என்று நினைத்து வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஸ்காட்லாந்தில் வேலை கிடைத்தது.
ரூ.10,000 முதலீட்டில் உருவான பயோகான்...
இதைத் தொடர்ந்து அயர்லாந்து சென்று என்ஸைம் குறித்து தெரிந்து கொண்டார். 1978-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து பயோகான் நிறுவனத்தைத் தொடங்குகினார். அப்போது லைசென்ஸ்ராஜ் உச்சத்தில் இருந்த எமர்ஜென்சி காலம். எனவே, பெரும்பான்மையான பங்குகள் இந்தியர்களுக்கும், குறைவான பங்குகள் வெளிநாட்டவருக்கும் இருந்தது. 10,000 ரூபாய் முதலீட்டில் பயோகான் தொடங்கி என்ஸைம் ஏற்றுமதி செய்தார் கிரண்.
அப்போது வேறு சில சிக்கல்களையும் கிரண் சந்திக்க வேண்டியிருந்தது. நிறுவனம் தொடங்குவதில் சிக்கல், பணியாளர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல், வங்கியில் கடன் கிடைப்பதில் சிக்கல் என பல சிக்கல்களுக்கு பிறகுதான் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டில் 8 லட்ச ரூபாய் வருமானமும், ஒரு லட்ச ரூபாய் நிகர லாபமும் அடைந்தது.
கணவர் செய்த முதலீட்டு உதவி...
இதைத் தொடர்ந்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்குக் கடன் வாங்க ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தை அணுகினார். ஐ.சி.ஐ.சி.ஐ ஈக்விட்டி முதலீடு செய்தாக விரும்பியது. அதன்பிறகு அயர்லாந்து நிறுவனத்தை யுனிலீவர் குழுமம் வாங்கியது. அதனால் கணிசமான பங்குகள் யுனிலீவர் வசம் இருந்தன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பங்குகளை வேறு நிறுவனத்துக்கு விற்க யுனிலீவர் விரும்பியது. ஆனால், அந்தக் குழுமம் வசம் செல்ல கிரண் விரும்பவில்லை. அதனால் அந்த பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மூலம் (buyback) கிரண் மற்றும் அவரின் கணவர் ஜான் ஷா இணைந்து வாங்கினார்கள்.
இவர்களுக்கு திருமணமான புதிதில் இந்த டீல் நடந்திருக்கிறது. அப்போது அவர் ``இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தால், வரதட்சணை கிடைக்கும் எனக் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், இப்போது என்னுடைய மொத்த சேமிப்பும் கரைந்துவிட்டது’’ என்று நகைச்சுவையாகச் சொன்னாராம்.
பயோகான் உருவான கதை...
என்ஸைம்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஓரளவுக்கு வளர்ந்தாகிவிட்டது. அதற்குத் தேவையான மூலதனமும் கிடைத்துவிட்டது. அடுத்து, பார்மா துறையில் நுழைந்தார் கிரண். 1998-ம் ஆண்டு பார்மா துறையில் களம் இறங்கியது பயோகான். 2004-ம் ஆண்டு பயோகான் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியாகி 32 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து, பெரிய வெற்றி பெற்றது.
2016-ம் ஆண்டு பயோகான் பயாலஜீஸ் என்னும் துணை நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதில் பல பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ இன்னும் 18 மாதங்களில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார் கிரண்.
மருந்துத் தயாரிப்பில் இன்றைக்கு முக்கியமான நிறுவனமாக இருக்கும் கிரண் மஜும்தாரின் பயோகான் நிறுவனம். ``பில்லியன் டாலர் சம்பாதிப்பதைவிட பில்லியன் நோயாளிகள் பயனடைய வேண்டும் என்பதே கனவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் கிரண்.
இந்தத் திருப்புமுனை நாயகி, பிசினஸில் இன்னும் நிறைய சாதிப்பார்!
(திருப்புமுனை தொடரும்)
Comments
Post a Comment