Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அதை சரிசெய்ய முடியாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். விஜய் ஷங்கர் கண்ணில் ரத்தக் கசிவு (Vitreous Hemorrhage) ஏற்படுவதற்குப் பொதுவாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension/பிபி), மற்றொன்று நீரிழிவு நோய் (Diabetes). நீரிழிவு நோயில், கண்ணில் ஆக்ஸிஜன் குறைவு (Hypoxia) ஏற்படுகிறது. இதனால், கண்ணில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன. இந்த இயல்புக்கு மாறான புதிய ரத்தக் குழாய்கள் (Abnormal Blood Vessels) தொடர்ந்து ரத்தம் கசியும் (Bleeding Tendency) தன்மையுடன் இருப்பதால், இதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத...